நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவர்களில் முதலில் அனுமதிக்கப்பட்ட 5 பேருக்கு 2-ம் கட்ட சோதனை நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கு மட்டும் கொரோனா சோதனை தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று இருந்ததால் அவர்களை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவரை டிஸ்சார்ஜ் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் அவரது உறவினர்கள் கொரோனா பாதிப்பால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், தானும் ஆஸ்பத்திரியிலேயே இருப்பதாக அந்த நபர் தெரிவித்தார். எனவே அவரை டிஸ்சார்ஜ் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில் முதலில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. அந்த நபருக்கு இன்று மேலும் ஒரு சோதனை நடத்தப்படுகிறது. அதிலும் அவருக்கு நோய் பாதிப்பு இல்லை என தெரிய வந்தால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது.
ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 16 பேர் தவிர, சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக மேலும் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சளி, ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. 918 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டதில் 701 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்துள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு சோதனை நடந்து வருகிறது.
இதற்கிடையே கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனே தெரிந்து கொள்ள பயன்படும் ரேபிட் டெஸ்ட் கிட் என்ற நவீன பரிசோதனை கருவிகள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளன.
கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தான் இந்த நவீன கருவிகள் மூலம் பரிசோதனைகள் செய்ய அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நவீன பரிசோதனைகளை இங்கு பயன்படுத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.