ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 70 ஆக இருந்தது.
சென்னைக்கு அடுத்தபடியாக ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டமாக இருந்ததால் ஈரோடு மாவட்டத்தை மத்திய அரசு சிகப்பு மண்டலமாக அறிவித்தது.17 இடங்களை சீல் வைத்து 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 1 லட்சத்து 66 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இதில் ஒருவர் பலியானார். 65 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். மீதி உள்ள 4 பேர் மட்டும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களும் குணமடைந்து நேற்று மாலை வீடு திரும்பினார்கள்.
அனைவரும் குணமடைந்து வீடு திரும்பியதால் ஈரோடு மாவட்டம் கொரோனோ தொற்று இல்லாத மாவட்டமாக மாறி உள்ளது.
ஈரோடு சிகப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்துக்கு மாற வாய்ப்புள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளும் ஓரளவு தளர்த்தப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.