தலையணை செல்லும் நுழைவுவாயில் மூடப்பட்டுள்ளதை காணலாம் 
செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி- களக்காடு தலையணை மூடப்பட்டது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை இன்று முதல் மூடப்பட்டது.

மாலை மலர்

களக்காடு:

சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே புரட்டி போட்டுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். கேரளாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் பக்கத்து மாவட்டமான நெல்லை மாவட்டத்திற்கு பரவும் அபாயம் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழக அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சுற்றுலா தலங்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை இன்று முதல் மூடப்பட்டது. இதையொட்டி தலையணை நுழைவு கேட் மூடப்பட்டது, அங்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் இளங்கோ ஆலோசனைபடி வன சரகர் புகழேந்தி தலைமையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி தலையணை வெறிச்சோடி காணப்படுகிறது. இதுபோல் திருக்குறுங்குடி நம்பி கோவில் மலைக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ந் தேதி வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.