பால் 
செய்திகள்

சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம்

பால் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் பலர் அதிகமாக வாங்கி இருப்பு வைக்கக்கூடும் என்பதால் ஆவின் நிறுவனம் இன்று கூடுதலாக ஒரு லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்துள்ளது.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் தனியாக இருப்பதன் மூலம் இந்த நோய் கிருமியை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த யுக்தி கையாளப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நாளை அனைத்து கடைகளும் அடைக்கப்படுகின்றன. போக்குவரத்து சேவையும் நிறுத்தப்படுகின்றன. ஆனால் அத்தியாவசிய பொருட்களின் சேவை எந்த தடங்கலும் இல்லாமல் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பால், தண்ணீர், மின்சாரம் போன்ற முக்கியமான சேவையில் பாதிப்பு இருக்கக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில் ஆவின் பால் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு உள்ளது.

நாளை யாரும் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் வீட்டிற்குள் முடங்கி கிடப்பார்கள். இதனால் பால் தேவை அதிகரிக்கும்.

மேலும் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்ற பயத்தில் பலர் அதிகமாக வாங்கி இருப்பு வைக்க கூடும் என்பதால் கூடுதலாக இன்று ஒரு லட்சம் லிட்டர் பால் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 12 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் சப்ளை தினமும் செய்யப்படுகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இன்று 13 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் வினியோகிக்கப்பட்டது. இதே அளவு நாளையும் சப்ளை செய்யப்படும் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆவின் பால் வினியோகத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வசதி செய்யப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய 3 பால் பண்ணையில் இருந்தும் பால் வினியோகம் வழக்கத்தை விட முன் கூட்டியே இன்று தொடங்கப்பட்டது. வழக்கமாக அதிகாலை 2 மணிக்கு தொடங்கி 5.30 மணி வரை வினியோகம் நடைபெறும். இன்றும், நாளையும் அதிகாலை 1 மணிக்கு வினியோகம் தொடங்கி 4.30 மணிக்குள் முடிக்கப்படும்.

பால் வினியோக லாரிகள் அனைத்தும் 5 மணிக்குள் திரும்பி வந்து விட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக ஆவின் பால் விற்பனை மையங்கள் நாளை முழுமையாக செயல்படும். 38 இடங்களில் ஆவின் பார்லர்கள் இயங்குகின்றன.

அங்கு பால் மற்றும் பால் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும். பால் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க 1 லட்சம் லிட்டர் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பால் தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஆவின் நிர்வாகம் தகுந்த ஏற்பாட்டினை செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பால் முகவர்கள் நாளை காலை 7 மணிக்கு பிறகு வினியோகத்தில் ஈடுபடுவதில்லை என்று அறிவித்துள்ளனர். ஓட்டல்கள், டீக்கடைகள் மூடப்படுவதால் தனியார் பால் சேவை பாதிக்கப்படும்.

மேலும் மளிகைக் கடைகள், சிறு பெட்டிக்கடைகளும் அடைக்கப்படுவதால் பால் கிடைப்பது கஷ்டம். அதனால் இன்றே தேவையான அளவு பாலினை வாங்கி இருப்பு வைத்து கொள்ள மக்கள் ஆர்வம் காட்டினர்.