ஓவியப்போட்டி 
செய்திகள்

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிய பெண்கள், குழந்தைகளுக்கு ஓவியம்-கோலப்போட்டி

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கிய பெண்கள், குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி, கோலப்போட்டியை கூடுதல் டி.ஜி.பி. ரவி அறிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

கொரோனாவால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும் பயனுள்ள வகையில் அவர்கள் பொழுதை கழிக்கவும், தமிழக போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ரவி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது:-

இந்த ஊரடங்கு சமயத்தில் தமிழக காவல் துறையினர் மேற்கொண்டு வரும் பணியை பொதுமக்களும் மதித்து நடந்து வருகிறார்கள். வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகளுக்கு காவல் துறை சார்பில் ஓவியப் போட்டியும், ரங்கோலி (கோலப்) போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 4 முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என் குடும்பமும், 11 முதல் 16 வயதிலான குழந்தைகள் எங்களின் அன்றாட ஹீரோக்கள் என்ற தலைப்பிலும் ஓவியங்களை அனுப்ப வேண்டும். பெண்கள் போ கொரோனா போ என்ற தலைப்பில் கோலம் வரைந்து அனுப்பி வைக்க வேண்டும்.

இதற்காக வெளியில் வரக்கூடாது வீட்டுக்குள்ளேயே கோலம் வரையவேண்டும். குழந்தைகள் வரையும் ஓவியங்களை tnpolic.artcontest@gmail.com என்ற முகவரிக்கும் தங்கள் கோலங்களை tnpolic.rangolicontest@gmail.com என்ற முகவரிக்கும் மே 3-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.