கோவை:
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி பிரத்யேகமாக செயல்பட்டு வருகிறது. இதுதவிர சில தனியார் ஆஸ்பத்திரிகளிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் கோவையை சேர்ந்த 48 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 57 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களின் ரத்தம், சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
புதிதாக யாருக்கும் தொற்று இல்லை
கோவை மாவட்டத்தில் கடந்த 3-ந் தேதி 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அதன்பிறகு நேற்றுடன் 8-வது நாளாக புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான 146 பேரில் 141 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் சென்னையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தற்போது இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 4 பேருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. கொரோனா சந்தேகத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் 131 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 31 பேரும் என மொத்தம் 162 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பரிசோதனை
இதற்கிடையில் மாலத்தீவில் சிக்கித்தவித்த 52 தமிழர்கள் உள்பட பலர் மீட்கப்பட்டு கப்பல் மூலம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத் துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் தமிழகத்தை சேர்ந்த 52 பேர் பஸ் மூலம் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். இதில் 30 பேர் ஒரு தனியார் பள்ளியிலும், 22 பேர் தனியார் திருமண மண்டபத்திலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு ரத்தம் மற்றும் சளி பரிசோதனை செய்யப்பட்டது. இதில், யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பது உறுதியானது. மீண்டும் அவர்கள் 52 பேரின் சளி, ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 3 பேரை தவிர மற்ற 49 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. 3 பேருக்கு மட்டும் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் 52 பேரும் சொந்த ஊருக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, நேற்று முன்தினம் மாலத்தீவில் இருந்து கேரளா வழியாக அழைத்து வரப்பட்ட கோவையை சேர்ந்த 4 பேர் உள்பட மொத்தம் 52 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கோவையை சேர்ந்த 4 பேர் உள்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. ஆனால் கடலூரை சேர்ந்த ஒருவருக்கும், திருச்சியை சேர்ந்த 2 பேருக்கும் கொரோனா சந்தேகம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தனி வாகனம் மூலம் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா சந்தேகம் உள்ள 3 பேரை கண்காணிக்க அந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. என்றனர்.