கொரோனா வைரஸ் 
செய்திகள்

திருவாரூரில் சுகாதாரப் பணியாளருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்- அவருடன் தொடர்புடையவர்களும் கண்காணிப்பு

திருவாரூரில் 23 வயது சுகாதாரப் பணியாளருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருடன் தொடர்புடையவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாலை மலர்

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பேருராட்சி பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர் கொரடாச்சேரியில் உள்ள தஞ்சை சாலையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார ஆய்வு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இவருக்கும், இவரோடு பணிபுரியும் சுகாதார ஆய்வு உதவியாளர்களுக்கும் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளனர். ஆய்வுக்கு சென்று வந்த நிலையில் மேற்படி நபருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபரை திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர் குடியிருந்த பகுதி முழுவதும் முற்றிலுமாக தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவரது குடும்பத்தினர் மற்றும் இவரோடு தொடர்புடைய நபர்களும் கணக்கெடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியில் கொரரோனா வைரஸ் தொற்று கண்டறியப் பட்டுள்ளதால் நகருக்குள் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நகரை சுற்றி 5 கி.மீ தூரத்திற்கு பாதுகாக் கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு வெளிநபர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக செயல் அலுவலர் செந்திலன் தெரிவித்தார்.