கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் ஏற்கனவே 272 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று 259 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது. இதில் மகாராஷ்டிரா, புதுடெல்லி ஆகிய மாநிலங்களிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு வந்த 11 பேர் மற்றும் கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 9 பேர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 272-ல் இருந்து 292 ஆக உயர்ந்துள்ளது. இதில் 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாராஷ்டிரா, டெல்லி, பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களால் தற்போது கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்து 300-ஐ நெருங்கும் அளவுக்கு வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 380 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஏற்கனவே 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ள நிலையில் 329 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 48 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.
கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளின் முடிவுகள் வந்தது. இதில் மேலும் 4 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 45 வயதுடைய பொக்லைன் எந்திர ஆபரேட்டரும், செஞ்சி சின்னபொன்னம்பூண்டியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணும், வளவனூரை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரும், விக்கிரவாண்டியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 384 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த 203 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டும், கொரோனா முன்எச்சரிக்கை தொடர்பாக 318 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.