ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் உள்ள கொரோனா வைரஸ் சிறப்பு வார்டு 
செய்திகள்

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 4 பேர் வீடு திரும்பினர்

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 4 பேர் வீடு திரும்பி உள்ளனர்.

மாலை மலர்

ராயபுரம்:

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் விமான நிலையத்தில் வைத்தே தீவிரமாக பரிசோதனை செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு சளி, காய்ச்சல், உள்ளிட்ட கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியிலும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 4 பேர் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பி உள்ளனர்.

இது தொடர்பாக ஆஸ்பத்திரி டீன் சாந்தி மலர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

சீனாவில் மருத்துவம் பயின்று வரும் தமிழக மாணவிகள் 2 பேர் மற்றும் சீனாவில் இருந்து பயிற்சிக்காக தமிழகம் வந்து தனியார் ஓட்டலில் தங்கி இருந்த சீனர்கள் 2 பேர் என 4 பேருக்கு சளி மற்றும் இருமல் இருந்தது.

எனவே அவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என உறுதி செய்யப்பட்டது. எனினும் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பி உள்ளனர்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆஸ்பத்திரியில் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நோய் தொற்று இல்லாத பிரத்யேக அறைகள் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

ஸ்டான்லி மருத்துவமனையில் தொற்று நோய் சிகிச்சை குறித்து மக்களிடையே ஒரு பயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், மருத்துவமனை முழுவதும் ரசாயன தெளிப்பான் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

ஆஸ்பத்திரியில் டாக்டருக்கு உரிய பாதுகாப்பு கவசம் அளிக்கப்படுகிறது. சில மருத்துவ மாணவர்கள் பயந்து தங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று தவறான கருத்தை பரப்பி உள்ளார்கள்.

அனைத்து வார்டுகளிலும் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க ஸ்பிரே அடிக்கப்படுகிறது. சிறப்பு வார்டில் செல்வதற்கு 92 சதவீதம் தூய்மையான காற்றை சுவாசிக்கும் சிறப்பு முக கவசம் டாக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கை உறைகள், கால் உறைகள் என பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

வைரஸ் பாதிப்பினால் அதிக நபர்கள் வந்தால் சிகிச்சை அளிப்பதற்காக 2 வார்டுகள் தயார் நிலையில் உள்ளது.

கொரோனா வைரஸ் சிறப்பு வார்டுக்கு 24 மணி நேரமும் கண்காணிக்கக்கூடிய 10 பேர் கொண்ட சிறப்பு மருத்துவர் குழு தயார் நிலையில் உள்ளது.

சிறப்பு வார்டுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு கவச உடைகளும் போதுமான அளவு கைவசம் உள்ளது. பொதுமக்கள் கொரோனா வைரஸ் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மருத்துவ நிலைய அதிகாரி ரமேஷ் மற்றும் கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.