கொரோனா வைரஸ் 
செய்திகள்

கரூரில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு கொரோனா அறிகுறி

கரூரில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்தது தெரியவந்தது. அந்த பெண்ணை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கரூர்:

கரூர் மாவட்டம் தோகை மலை வேதாச்சலபுரம் பகு தியில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று திரும்பிய 2 பேரை கடந்த மாதம் 30-ந்தேதி சுகாதாரத்துறை அதிகாரிகள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். 

இதில்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்னொருவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும் இருவரின் குடும்ப உறுப்பினர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தி கண்காணித்தனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட் நபர் நேற்று முன்தினம் குணமடைந்து வீடு திரும்பினார். 

இந்த நிலையில் வேதாச்சலபுரம் பகுதியில் வசித்து வந்த 58 பேருக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் டெல்லி மாநாட்டுக்கு சென்று பின்னர் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நபரின் 35 வயது மகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. 

உடனே ஆம்புலன்ஸ மூலம் அந்த பெண்ணை கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் வேதாச்சலபுரம் பகுதிக்கு சீல் வைத்து அப்பெண்ணின் குடும்பத்தில் உள்ள 6 பேரையும், சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களையும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.