நெல்லை:
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு தொடங்கப்பட்டது மட்டுமின்றி, கொரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டது. தென் மாவட்டமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வசதியாக இந்த மையம் தொடங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தாக்கியதாக சந்தேகப்படும் நோயாளிகளை இங்கு அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சளி, இருமல், காய்ச்சலுடன் சந்தேகப்படும் வகையில் வந்த 10 நோயாளிகள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு பரிசோதனைகள் நடந்தது.
இதில் பெரும்பாலான நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்று கண்டறியப்பட்டது. இதனால் அவர்கள் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்கள். சிலர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த ஒரு 65 வயது பெண் சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார்.
அவரை கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு சாதாரண காய்ச்சல் என்பது தெரியவந்தது. இதனால் அவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் நெல்லை ஆஸ்பத்திரியில் ராதாபுரம் அருகே உள்ள சமூக ரெங்கபுரத்தை சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க தொழிலாளி ஒருவர் கொரோனா அறிகுறியுடன் நேற்று வந்தார். அவர் கடந்த 17-ந்தேதிதுபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அவருக்கு சளி, காய்ச்சல், இருமல் இருந்ததால் அவருக்கே அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றம் தெரிந்துள்ளது.
இதையடுத்து அவர் தனக்கு கொரோனா தாக்கியிருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக நேற்று முன்தினம் மாலை வந்துள்ளார். அங்கு அவரை முதற்கட்டமாக பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதை அறிந்தனர். இதனால் அவரது ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த தகவல் சுகாதாரத்துறையினர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.இதனால் இன்று அவரை அங்குள்ள தனிமை வார்டுக்கு மாற்றினார்கள். அங்கு அவருக்கு முக கவசம் அணிந்து டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
அவருக்கு சிகிச்சை அளிக்க செல்லும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பணியாளர்களும் கவச உடை அணிந்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவரை பார்க்க உறவினர்கள் உள்பட யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை எந்த நோயாளியும் கொரோனா வைரஸ் தாக்கி அனுமதிக்கப்படவில்லை.
தற்போது தான் முதன் முதலாக தனிமை வார்டில் வெளிநாட்டில் இருந்து வந்த இந்த நபர் கொரோனா நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதையடுத்து இன்று முதல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருகிற அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்திய பிறகுதான் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக மருத்துவமனை வாசலில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து டாக்டர்கள் பரிசோதனை நடத்த உள்ளனர்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பிய 150-க்கும் மேற்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வப்போது மருத்துவ பணியாளர்கள் அவர்களது வீடுகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சவுதி அரேபியா, குவைத், கத்தார், துபாய் போன்ற நாடுகளில் வேலை செய்த ஏராளமானோர் தற்போது விடுமுறையில் தங்களது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கு வந்து உள்ளனர்.
கடைய நல்லூருக்கு 75 பேரும், கடையநல்லூர் தாலுகாவில் உள்ள சொக்கம்பட்டி, திரிகூடபுரம், இடைகால், நயினாகரம் ஆகிய ஊர்களுக்கு 10 பேர் என மொத்தம் 85 பேர் வந்துள்ளனர். அவர்கள் 85 பேரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார தடுப்பு மேற்பார்வையாளர் புன்னை வனம் தெரிவித்துள்ளார்.