கொரோனா வைரஸ் பரிசோதனை 
செய்திகள்

கொரோனா சமூக பரவலை தடுக்க விருதுநகர் மாவட்ட எல்லைகளில் தீவிர சோதனை

கொரோனா தொற்று சமூக பரவலை தடுக்க விருதுநகர் மாவட்டம் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

மாலை மலர்

விருதுநகர்:

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 25 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். அதன் பலனாக 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இது மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் அனைவரும் விருதுநகர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

எனவே கொரோனா தொற்று சமூக பரவலை தடுக்க விருதுநகர் மாவட்டம் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. மாவட்ட எல்லைகளான சாத்தூர், ஆவியூர், பந்தல்குடி, எம்.ரெட்டியபட்டி, சொக்க நாதன்புதூர் பகுதிகளில் வாகன சோதனை தீவிரமாக நடைபெறுகிறது.

அந்த இடங்களில் மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் வாகனங்களில் வருவோரை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கிறார்கள். மேலும் சளி மற்றும் இருமல் உள்ளதா? என்பது குறித்தும் பரிசோதிக்கிறார்கள்.

இதில் எந்த அறிகுறியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். அறிகுறி ஏதாவது தென்பட்டால் அவர்கள் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர்.