கொரோனா வைரஸ் 
செய்திகள்

சேலத்தில் போலீஸ்காரருக்கு கொரோனா பாதிப்பு- 90 போலீசாரை தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சேலத்தில் 27 வயது போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவருடன் தங்கி பணிபுரிந்த 90 போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

சேலம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளிப்பகுதியில் தமிழக காவல் துறையின் பட்டாலியன் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாலியன் பிரிவை சேர்ந்த போலீசார் 90 பேர், கடந்த பிப்ரவரி மாதம் சேலத்திற்கு பாதுகாப்பு பணிக்கு வந்தனர். இவர்கள் சேலம் அன்னதானப்பட்டியில் உள்ள காவலர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த 27 வயது போலீஸ்காரர் சேலம் அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு எடுக்கப்பட்டிருந்தது. நேற்று அவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானது. இதையடுத்து அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அந்த போலீஸ்காரர் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் அவருடன் தங்கி பணிபுரிந்த 90 போலீசாரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட போலீஸ்காரர் எங்கெல்லாம் பணிபுரிந்தாரோ அந்த இடங்களில் பணிபுரிந்த போலீசார் அனைவரையும் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். கொரோனா தொற்று கண்டறியப்பட்ட போலீஸ்காரருக்கு, எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் நல்ல உடல் தகுதியுடன் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.