கமுதி:
கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டு, அரசு சார்பில், மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற அரசு நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விடபட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பால், சமூக இடை வெளியுடன் மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளது. இந்த நிலையில் கமுதி அருகே இடையங்குளத்தில் காவிரி குடிநீர் பல மாதங்களாக சப்ளை செய்யாததால், ஊரணி கரையோரத்தில் உள்ள மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் காவிரி குடிநீரை சேகரிக்க, பலமணி நேரம் காத்திருக்கின்றனர்.
குடிநீர் சேகரிக்க வேறுவழியில்லாததால், கிராம மக்கள் சமூக இடை வெளியை பின்பற்ற முடியாமல், குடிநீர் சேகரிக்க காத்திருப்பது, வேதனையளிப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
கொரோனாவால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலையில், காவிரி குடிநீரை சீராக இடையங்குளத்திற்கு சப்ளை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.