செய்திகள்

முத்திரைத்தாள் மோசடி குற்றவாளி தெல்கி பெங்களூர் மருத்துவமனையில் மரணம்

முத்திரைத்தாள் மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்ட அப்துல் கரீம் தெல்கி பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெங்களூர்:

நாட்டையே உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிலான முத்திரைத்தாள் மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர் அப்துல் கரீம் தெல்கி. இவருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து, புனே நகரில் உள்ள எர்ரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது உடல் நிலையை காரணம் காட்டி பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றப்பட்ட தெல்கி கடந்த 11 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வந்தார்.

பரப்பன அக்ரஹாரா சிறையில் அப்துல் கரீம் தெல்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா சமீபத்தில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, சிறையில் இருந்த அப்துல் கரீம் தெல்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் நானையா நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உயிர் காக்கும் உபகரணங்களின் துணையுடன் சிகிச்சை பெற்றுவந்த அப்துல் கரீம் தெல்கி, உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் இன்று மரணம் அடைந்தார். 

SCROLL FOR NEXT