செய்திகள்

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்மழை காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மும்பை:

மாகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மழையின் அளவு 30.92 மி.மீட்டராக பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கி காணப்படுகிறது. நகரத்தில் உள்ள நான்கு நீர்நிலைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் மும்பை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மழையால் ஏற்படும் பாதிப்புகளை பேரிடர் மேலாண்மை படையுடன் இணைந்து எதிர் கொள்ள இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது.

கனமழையால் நகரின் சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 2 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், மழையால் இன்று காலை முதல் விமான போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள் மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.