சென்னை:
ஆயுத பூஜை பண்டிகை நாளை(வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், வருகிற 2-ந்தேதி(திங்கட்கிழமை) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வருவதால் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருகிறது. தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் உள்ளவர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய இருக்கின்றனர்.
இந்த கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள்.
சாதாரண நாட்களில் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணத்தையும், இதுபோன்ற பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்படும் கட்டணத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் மிகவும் வித்தியாசம் இருக்கிறது.
ஆம்னி பஸ் உரிமையாளர்கள் டிக்கெட் ‘புக்கிங்’ ஆவதற்காக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். அந்த நிறுவனத்தின் இணையதள முகவரியில் சென்று பார்த்தால், சாதாரண நாட்களில் ஏ.சி. மற்றும் ஏ.சி. அல்லாத பஸ்களில் பயணிக்க ரூ.600 முதல் ரூ.1,300 வரையிலும் டிக்கெட் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.
ஆனால் இதுபோன்ற பண்டிகை காலங்களில் அந்த இணையதள முகவரிக்கு ஆம்னி பஸ் கட்டணத்தை சென்று பார்த்தால் 2 மடங்கு உயர்ந்து இருக்கிறது. சாதாரண பஸ்களில் கூட நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட் விலையில் இருந்து ரூ.100 முதல் ரூ.300 வரையிலும், ‘ஹை கிளாஸ் மாடல்’ பஸ்களில் ஒரு டிக்கெட்டை ரூ.500 முதல் ரூ.1,300 வரையிலும் உயர்த்தி இருக்கிறார்கள்.
இதுகுறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த சேவியர் வின்சென்ட் ராஜ் என்பவர் கூறியதாவது:-
ஆம்னி பஸ்களில் இப்படி வெளிப்படையாக கட்டண கொள்ளை நடப்பதை போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டும், காணாமலும் இருக்கிறார்கள். அவ்வப்போது அதிக கட்டணம் வசூலித்த பஸ்கள் பறிமுதல் என்று ஒரு சில பஸ்களை மட்டும் பிடித்துக்கொண்டு அதிகாரிகளுக்கு சாதகமாக இருக்கும் பஸ்களையெல்லாம் விட்டுவிடுகிறார்கள்.
அந்த தைரியத்தில் தான் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் இது போல கட்டணத்தை உயர்த்துகிறார்கள். அதிகாரிகள் நடவடிக்கை அனைத்தும் இலை மறை காயாக தான் இருக்கிறது. இதில் மாட்டி தவிப்பது பொதுமக்களாகிய நாங்கள் தான்.
சாதாரண நாட்களில் ஒரு கட்டணத்தை வைத்து பஸ்களை லாபத்தில் இயக்கும் உரிமையாளருக்கு, பண்டிகை காலங்களிலும் அதே கட்டணத்தில் பஸ்களை இயக்கலாமே, அதை விட்டுவிட்டு கொள்ளை லாபம் பார்க்க நினைப்பது சரியல்ல. இதற்கு ஒரு நிரந்தர தீர்வை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏற்படுத்தி தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவ்வப்போது தெரிவித்து வருகிறார். நேற்று முன்தினம் கூட தீபாவளி சிறப்பு பஸ்களை அறிவித்த போது, ‘தீபாவளி பண்டிகை காலத்தில் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுப்பது உறுதி’ என்று அவர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை காலத்தில் அவர் எடுக்கும் நடவடிக்கைக்கு ஒரு அச்சாரமாக, ஆயுத பூஜை பண்டிகை விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பஸ் உரிமையாளர்களின் இந்த கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.