சென்னை:
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் தமிழ் நாட்டுக்கு காவிரியில் உரிய அளவு தண்ணீர் கிடைக்குமா? என்பதில் பலத்த சந்தேகமும், கேள்விக்குறியும் எழுந்துள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக கர்நாடகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே நீடித்து வரும் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் சுப்ரீம்கோர்ட்டு கடந்த மாதம் 16-ந்தேதி இறுதி தீர்ப்பை வழங்கியது.
தமிழ்நாட்டுக்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட்டு, தண்ணீர் திறப்பை உறுதி செய்ய மத்திய அரசு 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த காலகெடு நேற்றுடன் முடிந்தது.
ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு எடுக்கவில்லை. அதற்கு பதில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் விளக்கம் கேட்கவும் மற்றும் 6 வாரம் கால அவகாசம் கேட்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
சுப்ரீம்கோர்ட்டில் நாளை இதற்காக மத்திய அரசு மனு செய்ய உள்ளது. அப்போது மத்திய அரசு நிலைபாடு என்ன என்பது தெரிந்து விடும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கூடாது என்று கர்நாடகா தொடர்ந்து எச்சரித்தப்படி உள்ளது. அங்கு சட்டசபை தேர்தல் நடப்பதால் மத்திய பா.ஜ.க. அரசு தற்போதைக்கு இந்த விவகாரத்தில் இருந்து நழுவி செல்லும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு இது வரை வெற்றியும் கிடைக்க வில்லை. முதலில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்கள். பிறகு அனைத்துக்கட்சி தலைவர்களும் டெல்லி சென்று பிரதமரை சந்திக்கலாம் என்று முடிவு செய்தனர்.
இதற்கிடையே பாராளுமன்றத்தையும் அ.தி.மு.க. எம்.பி.க்கள் முடக்கினார்கள். ஆனால் எதற்கும் மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை. இதனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்தாததால் மத்திய அரசுக்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது, அந்த வழக்கு மனுவில் எத்தகைய அம்சங்களை இடம் பெற செய்ய வேண்டும் என்றும் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி நாளை காலை 10 மணிக்கு சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட உள்ளது. இதற்காக பொதுப் பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர், முதல்-அமைச்சரின் செயலாளர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றனர்.
ஏற்கனவே சட்ட நிபுணர்கள் டெல்லியில் தயாராக உள்ளனர். தமிழக அதிகாரிகள் தெரிவிக்கும் தகவல்கள் அடிப்படையில் மனு தயாரிக்கப்பட்டு அது நாளை சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தமிழக அரசு தாக்கல் செய்யும் மனுவில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தாமதம் செய்வதால் காவிரி டெல்டா பாசன பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பது கோர்ட்டு அவமதிப்புக்குரியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதவிர இந்த ஆண்டு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட வேண்டிய அளவு நிலுவை குறித்தும் மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.