திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் 
செய்திகள்

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம்

திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் பள்ளிகளை திறக்க பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைப்பெற்றது.இதில் முதன்மைக் கல்வி அதிகாரி கு.குணசேகரன் கலந்து கொண்டு கருத்துக்களை கேட்டறிந்தார்.

மாலை மலர்

திருப்பத்தூர்:

பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் பள்ளிகளை திறந்து தங்களின் பிள்ளைகளை வகுப்புகளுக்கு அனுப்ப சம்மதமா அல்லது பள்ளிகளை திறக்க வேண்டாமா? எனக் கருத்துக்கேட்பு கூட்டம் நேற்று திருப்பத்தூர் அரசு பெண்கள் மீனாட்சி மேல்நிலைப்பள்ளி, மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் திருப்பத்தூர் கல்வி மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கு.குணசேகரன் தலைமையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சம்மதமா எனத் தங்களது கருத்துக்களை கூற கேட்டார். பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்பலாம் எனக் கூறுபவர்கள் கையை உயர்த்துமாறு கூறினார். அதற்கு பெரும்பாலான பெற்றோர் தங்களது கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்தனர். சில பெற்றோர் தற்போது கொரோனா பாதிப்பு உள்ளதால் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மாட்டோம், எனக் கூறினர்.

அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் நிருபர்களிடம் கூறுகையில், திருப்பத்தூர் கல்வி மாவட்டத்தில் 223 அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பெற்றோரிடம் பள்ளிகளை திறக்கலாமா? என இன்று (நேற்று) கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. பெற்றோரின் கருத்துக்களை பள்ளி கல்வித்துறைக்கு இன்று அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு முடிவெடுக்கும், என்றார்.

கருத்துக்கேட்பு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எஸ்.பரணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள் க.செல்வி, பி.கலைச்செல்வி, உதவி தலைமை ஆசிரியர்கள் கோ.மகேஸ்வரி, ஆர்.மருதமலை, ஆசிரியர் பயிற்சி பள்ளி பேராசிரியர் சுரேஷ்குமார் உள்பட பலர் கொண்டு மாணவ-மாணவிகளின் பெற்றோரிடம் கருத்துக்கேட்பு கூட்டங்களை நடத்தினர்.