கோப்புப்படம் 
செய்திகள்

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதலுக்கு சதி திட்டம்- புதிய பயங்கரவாத அமைப்பு பற்றி பரபரப்பு தகவல்கள்

மத்தியில் மீண்டும் பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாசவேலையில் ஈடுபட புதிய பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மாலை மலர்

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பில் 250 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுடன் தமிழகத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக கேரளாவில் பிடிபட்ட சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பூந்தமல்லியில் தங்கியிருந்த இலங்கை வாலிபர் ஒருவருக்கு இதில் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தப்பட்டது. அப்போது சென்னையில் அவருக்கு நெருங்கிய நண்பர்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதன் அடிப்படையில் சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது “அன்சா ருல்லா” என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்கி அதன் மூலம் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 13-ந்தேதி சென்னையில் மண்ணடி மற்றும் வேப்பேரியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அதே நேரத்தில் நாகையிலும் 2 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையின் போது என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு பல்வேறு ஆதாரங்கள் கிடைத்தன. அவர்கள் பயன்படுத்திய 9 செல்போன்கள், 15 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர ஏராளமான துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள், பயங்கரவாத ஆதரவு வாசகங்கள் அடங்கிய பேனர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. லேப்-டாப், ஹார்டு டிஸ்களும் சிக்கின.

சென்னையில் பிடிபட்ட சையதுபுகாரி, நாகையில் சிக்கிய ஹசன்அலி, முகமது யூசுப் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதன் முடிவில் ஹசன்அலியும், முகமது யூசுப்பும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சையது புகாரியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்தியாவில் மிகப்பெரிய நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்லாமிய ஆட்சியை இந்தியாவில் கொண்டுவர திட்டமிட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

பின்னர் பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்சில் தங்கியிருந்து இந்தியாவுக்கு எதிராக நாசவேலையில் ஈடுபட நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்தே இவர்கள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகே என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவர்களை பிடித்து சென்னைக்கு அழைத்து வந்துள்ளனர்.

மத்தியில் மீண்டும் பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நாசவேலையில் ஈடுபட இவர்கள் திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக “அன்சா ருல்லா” அமைப்பை தமிழகத்தில் பலப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர்.

ஆனால் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆரம்ப கட்டத்திலேயே அதனை முறியடித்துள்ளனர்.

இந்தியாவில்  “அன்சா ருல்லா” அமைப்பையும் பயங்கரவாத அமைப்பாக உருவாக்க திட்டம் தீட்டி செயல்பட்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் ஆட்களை திரட்டி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னணியில் இருக்கும் அனைவரையும் பிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.