செய்திகள்

மேகாலயா முதல்வராக பதவியேற்றார் கான்ராட் சங்மா - விழாவில் ராஜ்நாத் சிங், அமித் ஷா பங்கேற்பு

மேகாலயா மாநில முதல்வராக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா இன்று பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு விழாவில் ராஜ்நாத் சிங், அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். #Meghalaya #ConradSangma

60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் (21 தொகுதிகள்) வென்ற போதிலும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. உதிரி கட்சிகளின் ஆதரவையும் பெற முடியவில்லை. எனவே, 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜனதா, உதிரி கட்சிகள் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்கிறது.

காங்கிரசுக்கு அடுத்து பெரிய கட்சியாக தேசிய மக்கள் கட்சி உருவெடுத்துள்ளது. இந்த கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனநாயக கட்சி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை உறுப்பினர்கள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் ஜனநாயக முன்னணி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

காங்கிரசின் முயற்சி தோல்வியடைந்ததால் பா.ஜ.க. உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கும் பணியை தொடங்கியது தேசிய மக்கள் கட்சி. தேசிய மக்கள் கட்சி தலைவர் கான்ராட் சங்மா நேற்று முன்தினம் கவர்னர் கங்கா பிரசாத்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆட்சியமைக்க 31 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் தங்களுக்கு அதைவிட அதிகமாக 34 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக கூறி அதற்கான கடிதத்தையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்மா, ‘கவர்னரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறோம். தேசிய மக்கள் கட்சி-19, ஐக்கிய ஜனநாயக கட்சி-6, மக்கள் ஜனநாயக முன்னணி -4, ஹில் ஸ்டேட் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்த தலா 2 உறுப்பினர்கள், ஒரு சுயேட்சை என மொத்தம் 34 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை வழங்கியிருக்கிறோம்’ என்றார்.

இந்நிலையில் கான்ராட் சங்மாவை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, இன்று காலை 10.30 மணிக்கு கவர்னர் மாளிக்கையில் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது. முதல்வராக கன்ராட் சங்மா பதவியேற்றார். அவருக்கு கவர்னர் கங்கா பிரசாத் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

விழாவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு புதிய முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT