சோனியா காந்தி 
செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை நடக்கிறது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை வீடியோ கான்பரன்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவியேற்று கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 

மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ராஜினாமா செய்த ராகுல் காந்தி மீண்டும் கட்சித் தலைவராக வரவேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரசின் ஒரு பகுதி தலைவர்கள்  தீவிரப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் ஆர்வம் காட்டாத நிலையில், கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று சசிதரூர், மணிஷ் திவாரி உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்கள் குடும்பத்தைச் சாராதவரே காங்கிரசுக்கு தலைமை தாங்க வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா கூறியுள்ளது அக்கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் என அக்கட்சியின் பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல் மந்திரி அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையிலான மோதல் கூட பெரிய விரிசலாக விழுந்தது. அதன்பின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தலையிட்டபின் சச்சின் பைலட் சமாதானமானார்.

அடுத்ததாக, பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், தமிழகம் ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் வர உள்ளன. இதை எதிர்கொள்ள வலுவான தலைமை தேவை என்று  கட்சி நிர்வாகிகள் விரும்புவதாக தெரிகிறது.

மேலும், பாராளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத்தொடருக்கான விவாத ஆயத்த பணிகள், கொரோனா தொற்றுநோயை நிர்வகித்தல், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, லடாக்கில் சீன ஊடுருவல்கள், பிரதமர் நல நிதி மற்றும் பேஸ்புக் சர்ச்சை ஆகியவைஇந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.