செய்திகள்

பா.ஜ.க அரசு ‘கேம் சேஞ்சர்’ இல்லை, ‘நேம் சேஞ்சர்’ தான்: அமித்ஷாவுக்கு காங். பதிலடி

பாராளுமன்ற மாநிலங்களவையில் இன்று கன்னிப்பேச்சை நிகழ்த்திய பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, காங்கிரசை கடுமையாக விமர்சிக்க அவருக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் மாநிலங்களவையில் இன்று நடந்தது. இதில், பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா முதன் முறையாக அவையில் உரையாற்றினார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதாக அவர் தனது பேச்சில் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி அவர் பேசியிருந்தார். இதற்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், அமித் ஷா உங்களுடைய முதல் பேச்சுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

காங்கிரஸ் ஊழல் கட்சி என குற்றம் சாட்டுகிறீர்கள், ஆனால் உங்களுடைய ஆட்சியின் கீழே 2-ஜி வழக்கில் அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். எங்களுக்கு தேசத்தின் சட்டம் மீது முழு நம்பிக்கை உள்ளது, அது அதனுடைய பணியை செய்யும் என்றார். காங்கிரஸ் கட்சி முந்தைய காலங்களில் கொண்டுவந்த திட்டங்களை பாரதீய ஜனதா அரசு பெயரை மற்றும் மாற்றுகிறது என்றார்.

மோடி தலைமையிலான அரசு ‘கேம் ஜேஞ்சர் கிடையாது வெறும் நேம் ஜேஞ்சர் மட்டும்தான்’ என கிண்டலாக கூறினார் குலாம் நபி ஆசாத்.

முத்தலாக் விவகாரம் தொடர்பாக குலாம் நபி ஆசாத் பேசுகையில், “நீங்கள் சன்னி மற்றும் ஷியா இஸ்லாமியர்களை பிரித்துவிட்டீர்கள், இப்போது மனைவி மற்றும் கணவரை பிரிக்கிறீர்கள். கணவரை சிறையில் அடைத்துவிட்டு, மனைவியிடம் அவரை காப்பாற்றியதாக கூறுவீர்கள். நாங்கள் முத்தலாக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம், அதனை கிரிமினல் குற்றமாக்குவதை நாங்கள் ஆதரிக்கவில்லை,” என்றார்.