திருப்பூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூரை சேர்ந்த மாணவி அனிதா நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பில் சேரமுடியாததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
மாணவியின் தற்கொலை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் வர்த்தக பிரிவு மாநில செயலாளர் ராயல் வி.தர்மதுரை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
மாணவி அனிதாவையும், அவருடைய மருத்துவ கனவையும் புதைக்குழியில் தள்ளி விட்டார்கள். மேலும் மருத்துவ கனவோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஏழை, எளிய தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நீட் தேர்வின் மூலம் சிதைத்த மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம்.
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தமிழக மாணவி அனிதாவின் தற்கொலைக்கு பொறுப்பேற்றும், நீட் தேர்வுக்கு துணை போன தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.