நாகர்கோவில்:
தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதனால் சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியையும் இழந்தது. இதனை சரிக்கட்ட எடப்பாடி தரப்பினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களை சமரசம் செய்து மீண்டும் எடப்பாடி ஆட்சிக்கு ஆதரவாளர்களாக மாற்றவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இழுக்க முயற்சி நடப்பதாக நேற்று தகவல் வெளியானது. உளவுத்துறை மூலம் இந்த முயற்சி நடப்பதாகவும் கூறப்பட்டது.
காங்கிரஸ் கட்சிக்கு இப்போது 8 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு எடப்பாடி அணிக்கு கிடைத்தால் அவர்களின் எண்ணிக்கை 114-ல் இருந்து 122 ஆக உயரும். இது சட்டசபையில் தனி மெஜாரிட்டிக்கும் அதிகமான பலமாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு குமரி மாவட்டத்தில் மட்டும் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் உள்பட 8 எம்.எல்.ஏ.க்களையும் நேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அவசரமாக அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அ.தி.மு.க.வுக்கு இழுக்க முயற்சி நடப்பதாக வெளியான தகவல்களுக்கு குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:-
விஜயதரணி (விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.):-
உளவுத்துறை மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களை இழுக்க முயற்சிப்பது ஒருபோதும் நடக்காது. காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளனர். அவர்களை யாராலும் பிரிக்க முடியாது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கு வருகிற 4-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது வழக்கு விசாரணை நடந்து என்ன தீர்ப்பு வந்தாலும் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வார்கள். அங்கு இந்த வழக்கின் விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு வெளியாக ஒரு மாதமோ அல்லது சில மாதங்களோ ஆகலாம். அதற்குள் தமிழகத்தில் தற்போது நடைபெறும் எடப்பாடி ஆட்சி கவிழ்ந்து விடும். அதில், எந்த சந்தேகமும் இல்லை.
அ.தி.மு.க.வின் தோழமை கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட அவர்களை ஆதரிப்பதாக தெரியவில்லை. பொதுமக்களும், இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். எந்த திட்டங்களும் நடைபெறவில்லை. எனவே ஆட்சியாளர்களுக்கு பதில் அதிகாரிகளே மக்கள் நலப்பணிகளை மேற்கொள்ளும் நிலை உருவாகி உள்ளது.
பிரின்ஸ் (குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ.):-
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க் களை யாராலும் இழுக்க முடியாது. அ.தி.மு.க. இந்த முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு தோல்விதான் கிடைக்கும். காங்கிரஸ் எம்.எல். ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதை விட இருக்கும் அ.தி.மு.க. எம். எல்.ஏ.க்களை அவர்கள் பத்திரமாக பாதுகாத்து கொள்ளட்டும்.
இப்போது எடப்பாடி அணியில் இருக்கும் ராஜன் செல்லப்பா, ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். தினகரன் அணியினர், எடப்பாடி அணிக்குள் சிலீப்பர் செல்கள் இருப்பதாக கூறினார்கள். அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து சமரசம் செய்யட்டும்.
தமிழகத்தில் இப்போது நடப்பது எடப்பாடி ஆட்சி அல்ல. மத்திய அரசின் ஆட்சிதான் நடக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் தமிழக மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மக்களை நெருக்கடிக்கு தள்ளிய பிரதமர் மோடி விரைவில் மண்ணை கவ்வும் நிலை ஏற்படும்.
ராஜேஷ்குமார் (கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ.):-
அ.தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டனர். மூழ்கும் நிலையில் உள்ள அ.தி.மு.க. வுக்கு காங்கிரஸ் தொண்டன் கூட செல்ல மாட்டான். செயலற்ற இந்த அரசு வருகிற 4-ந்தேதிக்கு பிறகு கவிழ்ந்து விடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.