செய்திகள்

நீட் தேர்வு விவகாரம்: தமிழிசை மீது காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. பாய்ச்சல்

நீட் தேர்வு விவகாரம் என்பதை பற்றி ஒன்றுமே தெரியாதது போல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் தமிழிசை கேள்வி எழுப்பியதற்கு காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதாரணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

சென்னை:

காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. விஜயதரணி பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசையை கண்டித்து இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் மாணவி அனிதாவின் மரணம் எதனால் நடந்தது என்பதை பற்றி ஒன்றுமே தெரியாதது போல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் கேள்விகளை எழுப்பியுள்ளளார். தமிழிசைக்கு நான் 3 கேள்விகளை எழுப்புகிறேன்.

மாநில பாடத்திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் மத்திய பாடத்திட்டத்திலிருந்து கேள்விகளை எழுப்பி தேர்வை நடத்தியது யார்?

தமிழகம் போன்ற மாநிலங்களில் சமூகநீதி என்ற அடிப்படை கல்விக்கொள்கை பின்பற்றப்படுவதை முழுவதுமாக புறக்கணித்து விட்டு மத்திய கல்விக் கொள்கையை திணிப்பது ஏன்?

கல்வி என்பது இன்னும் பொதுப்பட்டியலில் தான் இருக்கிறது. ஆனால் மத்திய பட்டியலில் இருப்பதுபோல் ஒரு பார்வையை செலுத்தி தமிழக சட்டப் பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒரு மனதாக இயற்றிய நீட்டிற்கு எதிரான சட்டத்தை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாதது ஏன்?

தற்காலிகமாக அவசர சட்டம் கொண்டு வருவதையும் தகர்த்து அரசியலமைப்பு சட்டத்தில் பொதுப்பட்டியலில் மாநிலத்திற்கான உரிமைகளை பறிப்பது யார்?

இதற்கு தமிழிசை பதில் கூறுவாரா?

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.