சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் நடிகை குஷ்பு சமீபகாலமாக கட்சியில் ஓரம் கட்டப்பட்டு வந்தார். இதனால் கட்சிக்குள் சலசலப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் குஷ்புவுக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
எனவே அவர் இன்று பொதுக்குழுவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குஷ்பு கூட்டத்துக்கு வரவில்லை. அவர் வந்தால் உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கராத்தே தியாகராஜன் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் மண்டப வாசலில் திரண்டு குஷ்புவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி கராத்தே தியாகராஜன் கூறும் போது, ‘‘காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக குஷ்பு பணம் கட்டி சேரவில்லை. அதே போல் பொதுக்குழு உறுப்பினர் ஆவதற்கும் அவர் கட்டணம் செலுத்தி முறைப்படி உறுப்பினர் ஆகவில்லை. ஆனால் அவருக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது தொடர்பாக கட்சியின் மத்திய தேர்தல் குழுவுக்கு புகார் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.