நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா, தனக்கு மருத்துவ சீட் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். மாநில பாடத்திட்டத்தில் படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்தும் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில் அவர் உயிரை மாய்த்துள்ளார். அவரது மரணம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வு முறைதான் மாணவியின் உயிரைப் பறித்ததாக பலரும் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுபற்றி தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ‘மாணவி அனிதாவின் தற்கொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மாணவர்கள் இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல் மனவலிமையோடு இருக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு சட்டரீதியாக எடுத்த முடிவுக்கு துணை நின்றவர் மாணவி அனிதா. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அரசு தொடர்ந்து முயற்சி செய்தது’ என்றார்.
மாணவி அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தினார்.