புதுடெல்லி:
நாடுமுழுவதும் ஜூலை 1–ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. என்ற சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்படுவதையொட்டி, வரும் 30–ம் தேதி இரவு 11 மணிக்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஜூன் 30-ம் தேதி நடைபெறும் அறிமுக விழா நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
ஆனால், ஜி.எஸ்.டி-யின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்னவென்று கண்காணிக்க 6 மாத காலம் ஆகும். வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ள திரினாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு
செய்துள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில், உரிய விவாதங்களின்றி அவசர கோலத்தில் ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படுவதாக கூறி காங்கிரஸ் கட்சியும் இந்த கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சத்யவார்த் திரிவேதி தெரிவித்துள்ளார். இடதுசாரி கட்சிகளும் இக்கூட்டத்தை புறக்கணிக்கும் மனநிலையில் உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த கூட்டத்தை புறக்கணித்து மத்திய அரசுக்கு நெருக்கடியை அளிக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.