செய்திகள்

நதிநீர் பிரச்சினையில் மாநில மக்களின் நலனை காப்பதில் காங்., பா.ஜனதா கட்சிகளுக்கு அக்கறை இல்லை: தேவேகவுடா

நதிநீர் பிரச்சினையில் மாநில மக்களின் நலனை காப்பதில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு அக்கறை இல்லை என்று தேவேகவுடா குற்றம்சாட்டியுள்ளார்.

மாலை மலர்

பெங்களூரு:

பெங்களூரு மாகடிரோட்டில் ஜனதாதளம்(எஸ்) கட்சியின் செயல்வீரர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தின் நலனை காப்பதில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதாவினர் தோல்வி அடைந்து விட்டனர். அவர்கள் மாநிலத்தில் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று மட்டுமே எண்ணுகிறார்கள். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவோ, மாநிலத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதிலேயோ அக்கறை காட்டுவதில்லை. மகதாயி, காவிரி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில் கர்நாடகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் நதிநீர் பிரச்சினையில் மாநில மக்களின் நலனை காப்பதில் காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு அக்கறை இல்லை. மாநிலத்தின் முக்கிய உரிமைகளை பாதுகாக்க தேசிய கட்சிகள் தவறி விட்டன. கர்நாடகத்தின் நலனை காப்பதில் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு மட்டுமே அக்கறை உள்ளது. ஏனெனில் ஜனதாதளம்(எஸ்) தான் மாநில கட்சி. மாநிலத்தின் உரிமைகளை எக்காரணத்தை கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.

அதனால் அடுத்த ஆண்டு (2018) நடைபெறும் சட்டசபை தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை வெற்றி பெற செய்ய வேண்டிய பொறுப்பு மாநில மக்களுக்கு உள்ளது. இதற்காக கட்சி தொண்டர்களும் இரவு, பகல் பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும். இனிவரும் காலங்களில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜனதா மாநிலத்தில் ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக்கூடாது. அந்த கட்சிகளை நம்பி இதுநாள் வரை மக்கள் மோசம் போனது போதும்.

ஜனதாதளம்(எஸ்) போன்ற மாநில கட்சிகளை அழிக்கும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். பீகாரில் முதல்-மந்திரி நிதிஷ்குமார், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைத்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற செயல்களில் பா.ஜனதா ஈடுபடக்கூடாது. மாநில கட்சிகளை பா.ஜனதா அழிக்க நினைப்பது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு தேவேகவுடா பேசினார்.