புதுடெல்லி:
கொரோனா போன்ற பேரிடர்களை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு உருவாக்கி உள்ள ‘பி.எம்.கேர்ஸ்’ நிதி தொடர்பாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து மத்திய அரசை குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிதிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் பி.எம்.கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வென்டிலேட்டர்களில் சுகாதார அமைச்சக தொழில்நுட்பக்குழு நடத்திய பரிசோதனை தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து மீண்டும் பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக காங்கிரஸ் கட்சி மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், ‘உங்களுக்கு தெரியுமா...? பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து கேள்வி எழுப்பினால் தேச விரோதம். அப்படியானால், பி.எம்.கேர்ஸ் நிதியில் வாங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் பரிசோதனையில் தோல்வியடைந்தால், அதற்கான முன்பணம் கோடிக்கணக்கில் கொடுத்திருந்தால் என்ன செய்வது? மேலும் பி.எம்.கேர்ஸ் நிதிக்கு தணிக்கை அறிக்கை தேவையில்லை என சுப்ரீம் கோர்ட்டும் கூறும்போது...?’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
அத்துடன், இந்த வென்டிலேட்டர்களுக்காக ரூ.22 கோடி முன்பணம் கொடுத்திருப்பது தொடர்பான செய்தி ஒன்றையும் அவர் பகிர்ந்து இருந்தார்.