புதுடெல்லி:
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.
முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.
அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது. பா.ஜ.க.வை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் உச்சகட்ட உத்திகளை கையாண்டு வருகின்றன. பட்டேல் இனத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான ஹர்திக் பட்டேல் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் குதித்துள்ளார்.
முதல் மந்திரி விஜய் ருபானி மேற்கு ராஜ்கோட் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல் மந்திரி நிதின்பாய் பட்டேல் மெஹ்சானா தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 77 வேட்பாளர்களின் பெயர்கள் கொண்ட முதல் பட்டியல் கடந்த 20-ம் தேதி வெளியானது. 21-ம் தேதி 13 வேட்பாளர்களை கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டது. 76 தொகுதிகளுக்கான மூன்றாவது வேட்பாளர் பட்டியலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை இன்று காலை வெளியிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள சோட்டுபாய் வாசவா தலைமையிலான பாரதிய பழங்குடியினர் கட்சிக்கு வகோடியா மற்றும் மோர்வாஹடாப் ஆகிய இரு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துள்ள காங்கிரஸ் தலைமை மீதமுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் இறுதி பட்டியலை இன்று பிற்பகல் வெளியிட்டது.