செய்திகள்

ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள்

கேரளா மாநிலத்தில் ஆட்சி நடத்தி வரும் இடதுசாரி அரசை கண்டித்து, ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நிகழ்ச்சியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளா மாநிலத்தில் இடதுசாரி கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. அதிலும் கண்ணூர் மாவட்டத்தில் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே பிரச்னை ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் வார இதழான ’ஆர்கனைசர்’ கோழிக்கோடு மாவட்டத்தில் ஜூலை 1ம் தேதி அமைதியை தேடி என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் பிரசிடெண்ட் எம்.எம்.ஹாசன், முஸ்லிம் லீக் தலைவர் எம்.கே.முனீர் மற்றும் கேரள காங்கிரஸ் தலைவர் பி.சி.தாமஸ் உள்பட பலர் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும், பல கட்சி தலைவர்களுக்கு இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என ஆசிரியர் பிரபுல்ல கேத்கர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நிகழ்ச்சியில் காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது அம்மாநில அரசியலை மட்டுமல்லாது தேசிய அரசியல் அரங்கிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்நிகழ்வில் பங்கேற்பது தொடர்பான எந்த கருத்துக்களையும் இதுவரை மேற்கண்ட கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.