செய்திகள்

எடப்பாடி - தினகரன் ஆதரவாளர்கள் இடையே பனிப்போர்: அ.தி.மு.க.வில் மோதல் வலுக்கிறது

அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து அக்கட்சியில் பிளவு ஏற்பட்டது.

மாலை மலர்

சசிகலா தலைமையில் அ.தி.மு.க. (அம்மா) என்ற பெயரில் ஓர் அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. (புரட்சித் தலைவி அம்மா) என்ற பெயரில் மற்றொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருக்கிறார். சசிகலா சிறை சென்ற பிறகு அ.தி.மு.க. (அம்மா) அணிக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தலைமை ஏற்றார்.

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தினகரன் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில், அ.தி.மு.க. (அம்மா) அணியின் பணிகளை கவனிக்கும் பொறுப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார். அதன்பிறகு எடப்பாடி பழனிசாமி பெயரிலேயே கட்சி அறிவிப்புகள் வெளிவந்தன.

இதைத்தொடர்ந்து, கட்சியை காப்பாற்றவும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கவும் அ.தி.மு.க. (அம்மா), அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணிகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த முயற்சி கைகூடாமல் போனது. இந்த நிலையில், வழக்கில் ஜாமீன் பெற்று டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய டி.டி.வி. தினகரன், கட்சி பணிகளை மேற்கொள்ளப்போவதாக அறிவித்தார்.

அவருக்கு அ.தி.மு.க. (அம்மா) அணியைச் சேர்ந்த 34 எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அவரது வருகையை விரும்பவில்லை. இதனால் அ.தி.மு.க. (அம்மா) அணிக்குள்ளேயே புகைச்சலும், எதிர்ப்பும் உருவானது.

யார் தலைமையில் இயங்குவது? என்பதில் அ.தி.மு.க. (அம்மா) அணியில் தினகரன்-எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையே மெல்ல, மெல்ல பனிப்போர் ஏற்பட்டது. இந்த பனிப்போர் வலுத்து இரு தரப்பு எம்.எல்.ஏ.க்களும் தற்போது மாறி மாறி வெறுப்பு கருத்துகளை வெளியிட தொடங்கி உள்ளனர்.

அ.தி.மு.க. (அம்மா) அணியின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இதை கண்டிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பெரும்பாலானோர் கலந்து கொள்ளவில்லை.

சட்டசபையிலும் எடப்பாடி பழனிசாமி-தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இடையில் மோதல் ஏற்பட்டது. தனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ்ச்செல்வன் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தார். தினகரனை ஆதரிக்கும் மற்றொரு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல், அமைச்சர் ஜெயக்குமாருக்கு சவால் விடும் வகையில் சட்டசபையில் பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளருக்கு யார் முதலில் ஆதரவு தெரிவிப்பது என்பதில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான மோதல் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது.

பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் பா.ஜனதா ஆதரவு கேட்டதை தொடர்ந்து, அவர் பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து பேசினார். அந்த நேரத்தில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து சில நாட்களில் தினகரன் சார்பிலும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் பேட்டி அளித்த தம்பிதுரை, சசிகலாவின் உத்தரவின் பேரிலேயே அ.தி.மு.க. (அம்மா) அணி பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்ததாக கூறினார்.

அவரது இந்த கருத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கடுமையாக எதிர்த்தனர். எடப்பாடி பழனிசாமி சார்பிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் உண்மையில் யாருடைய உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டது? கட்சி யார் தலைமையில் இயங்குகிறது? என்பதில் அ.தி.மு.க. (அம்மா) அணி தொண்டர்களுக்கு குழப்பம் ஏற்பட்டு உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கோ.அரி எம்.பி. (அரக்கோணம்), அருண்மொழி தேவன் எம்.பி. (கடலூர்), முருகுமாறன் எம்.எல்.ஏ. ஆகியோர், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமியே கட்சிக்கும், ஆட்சிக்கும் தலைமை வகிக்க வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படியே ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது என்றும் வெளிப்படையாக தெரிவித்தனர். தம்பிதுரை கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

இவர்களின் பேச்சுக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் கூறும்போது, சசிகலா விருப்பப்படியே பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது என்றும், சசிகலா குடும்பத்தை கட்சியில் இருந்து யாரும் வெளியேற்ற முடியாது என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது, தினகரன் ஆதரவு அமைச்சரான ராஜேந்திரபாலாஜி, முன்னாள் அமைச்சரும் செய்தித்தொடர்பாளருமான வைகைச்செல்வனை கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார். வைகைச்செல்வன் 500 ரூபாய் பேச்சாளர் என்றும், கலப்படம் செய்யும் தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தனக்கு எதிராக கருத்து தெரிவித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

அவருடைய இந்த கருத்துக்கு வைகைச் செல்வன் தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார். ராஜேந்திர பாலாஜி தூக்கிய பசை வாளியை கீழே வைக்காமல் வீதி வீதியாக சென்று சினிமா போஸ்டர் ஒட்டியவர் என்றும், அ.தி. மு.க.வின் கோட்டையாக விளங்கிய விருதுநகர் மாவட்டத்தை தி.மு.க.வுக்கு தாரை வார்த்து கட்சியை புதை குழிக்குள் தள்ளியவர் என்றும் சாடி இருக்கிறார்.

இவர்கள் இருவரும் ஒருபுறம் மோதிக் கொண்டிருக்க மற்றொரு புறம் கோ.அரி எம்.பி.க்கும், வெற்றிவேல் எம்.எல்.ஏ.வுக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

திருத்தணியில் பேட்டி அளித்த கோ.அரி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும், அ.தி.மு.க.வை விட்டு சசிகலா, தினகரன் குடும்பத்தினர் நிரந்தரமாக விலகவேண்டும் என்றும் கூறினார்.

அவர் இவ்வாறு கூறியதற்கு வெற்றிவேல் கடும் கண்டனம் தெரிவித்தார். இவ்வாறு பேசும் கோ.அரி போன்றவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கண்டிக்கவேண்டும் என்றும், இல்லையேல் தவறு செய்தவர்களை எப்படி கிள்ளி எறிவது என்று தங்களுக்கு தெரியும் என்றும் கூறினார்.

ஆனால் இப்படி அ.தி.மு.க. அம்மா அணியினர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து சிக்கல்களை உருவாக்குவது குறித்து எடப்பாடி பழனிசாமியோ அல்லது தினகரனோ இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

இதனால் அந்த அணியில் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.