கேப்டவுன்:
தென்னாப்பிரிக்க அதிபராக ஜேக்கப் ஷுமா பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அவர் பதவி விலக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் அவர் மறுத்து விட்டார்.
எனவே அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறும் என சபாநாயகர் பலேகா பெட் அறிவித்தார். ஓட்டெடுப்பு ரகசிய முறையில் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு எம்.பி.க்கள் வாக்களிக்கின்றனர்.
அதிபர் ஷுமா மீது இதற்கு முன்பு 7 தடவை நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அவை அனைத்திலும் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால் தற்போதைய நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அவரது ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் உள்ளனர். எனவே அவர்கள் ஷுமாவுக்கு எதிராக வாக்களிப்பார்கள் என நம்பப்படுகிறது.
ஆகவே இந்த முறை அவரது அதிபர் பதவி தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் மைனாரிட்டியாக உள்ள வெள்ளையர்களின் ஆதிக்கம் கடந்த 1993-ம் ஆண்டுடன் முடிந்து விட்டது.
1994-ம் ஆண்டு முதல் பாராளுமன்றத்தில் கறுப்பர் இனத் தலைவர்களின் ஆதிக்கம் உள்ளது. இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜேக்கப் ஷுமா தோற்கடிக்கப்பட்டால் தற்காலிக புதிய அதிபர் இன்று மாலையே தேர்ந்தெடுக்கப்படுவார்.
அரசியல் சட்டப்படி 30 நாட்களுக்குள் தேர்தல் மூலம் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார்.