செய்திகள்

மடிப்பாக்கத்தில் கண்டக்டரை வெட்டி கொல்ல முயற்சி

மடிப்பாக்கத்தில் கண்டக்டரை வெட்டி கொல்ல முயன்ற 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மாலை மலர்

ஆலந்தூர்:

மடிப்பாக்கம் ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 52) ஆலந்தூர் சிமெண்ட் ரோடு பணிமனை டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.

இன்று அதிகாலை 5.45 மணியளவில் யுவராஜ் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

ஆதம்பாக்கம் ஏரி அருகே 200 அடி சாலையில் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் யுவராஜின் மோட்டார் சைக்கிளை இடித்து கீழே தள்ளினார்கள். பின்னர் யுவராஜை 3 பேரும் அரிவாளால் வெட்டினார்கள். அவரது கைகள், கால்களில் வெட்டு விழுந்தது.

அவர் கூச்சல் போட்டபடி கதறினார். உடனே அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் அங்கு ஓடி வந்தனர். இதைப்பார்த்ததும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டனர்.

உயிருக்கு போராடிய யுவராஜை ஆதம்பாக்கம் போலீசார் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்டக்டர் யுவராஜை வெட்டியது யார்? முன் விரோதம் காரணமாக அவரை வெட்டினார்களா? என்று ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கிறார்கள். அவரை வெட்டியவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து வருகிறார்கள்.