நாமக்கல்:
நாமக்கல்லைச் சேர்ந்த காண்டிராக்டரும், அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பருமான சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார்.
அந்த கடிதத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பனும், அவர்களது ஆதரவாளர்களும் தன்னை மிரட்டியதாக கூறி இருந்தார்.
இந்த தற்கொலை வழக்கை நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு ஓருமுறை பழனியப்பன் நேரில் வந்து விசாரணைக்கு ஆஜரானார். அதற்குபிறகு 2 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.
இதனால் அவரை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சத்தியமூர்த்தி தலைமையில் சென்ற போலீசார் கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தமிழக எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு ரிசார்ட்டில் சோதனை நடத்தினர். அங்கு பழனியப்பன் எம்.எல்.ஏ. இல்லை.
இதுபோல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியை அடுத்த மோளையானூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். அங்கும் அவர் இல்லை. தற்போது அவர் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிரமாக உள்ளனர்.
அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் வேறு செல்போன் எண்களில் இருந்து தனது உறவினர்கள் மற்றும் உதவியாளர்களையும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களையும் தொடர்பு கொள்வார் என்று போலீசார் நம்புகிறார்கள். அந்த செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
நேற்று பழனியப்பன் கைதானதாகவும், அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், அது உண்மை இல்லை என்று தினகரன் மறுத்தார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து பழனியப்பன் கோர்ட்டு உதவியை நாடபோவதாகவும் தினகரன் கூறினார்.
இதைத்தொடர்ந்து பழனியப்பன் சார்பில் அவரது வக்கீல் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்து இருக்கிறார். அந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.