செய்திகள்

கவர்னர் மாளிகை ஊழியர்கள் இருவருக்கு நிபந்தனை ஜாமீன்

கவர்னர் மாளிகையில் அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊழியர்கள் இருவருக்கு ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

சென்னை:

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை துணைச் செயலாளர், கிண்டி போலீசில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், ‘2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கவர்னர் மாளிகைக்கு நாற்காலி, மேஜை, அலங்காரப் பொருட்கள் வாங்கியதில் பெரும் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவர்னர் மாளிகைக்கு நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ‘சப்ளை’ செய்த முகமது யூனூஸ், கவர்னர் மாளிகை கணக்காளரான சிவக்குமார், ஓய்வுபெற்ற உதவி கணக்காளரான குப்புசாமி ஆகியோரை கைது செய்தனர்.

இதில், சிவக்குமாரும், குப்புசாமியும் ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, இருவருக்கும் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். #tamilnews