தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனரும், மாநில தலைவருமான பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உயிருக்கு தீங்கிழைக்கும் ரசாயனங்களை தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாகவும், தனியார் பால் நிறுவனங்களின் பாலை குடித்தால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு புற்றுநோய் வருவதாகவும் தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், தகுந்த ஆதாரங்கள் இன்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து கே.டி.ராஜேந்திர பாலாஜி அவர்கள் பேச தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று தனியார் பால் நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.
அதனைத் தொடர்ந்து தகுந்த ஆதாரமின்றி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச அவருக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் உண்மையில் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்தால் அந் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க எந்த தடையையும் நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை.
ஆனால் மக்கள் நலன் மீது உண்மையிலேயே அக்கறை உள்ளது போல காட்டிக் கொள்ளும் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து கடந்த மே மாதம் பேசத் தொடங்கியதில் இருந்து தற்போது வரை எந்த ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்க வில்லை என்பதும், வெறும் பேச்சளவில் மட்டுமே செயல்பட்டு மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்த சூழ்நிலையில் தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேச விதிக்கப்பட்ட அந்த தடையை நீக்க கோரி நேற்று நீதிமன்றத்தை அவர் நாடியிருப்பது உள்ளபடியே வருத்தமளிக்கிறது.
ஏனெனில் ஏற்கனவே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் எனும் பெயரில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் உருவாக்குகின்ற வகையில் பேசிய காரணத்தால் ஏற்கனவே பால் வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
எனவே தமிழக பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு உண்மையிலேயே பொது மக்கள் நலன் மீது அக்கறை இருக்குமாயின் தமிழக முதல்வரோடு கலந்து பேசி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உணவு தரக்கட்டுப்பாட்டு துறையை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும், உணவு தரக் கட்டுப்பாட்டு துறை மற்றும் தமிழக சுகாதாரத் துறையோடு இணைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச பகுப் பாய்வு கூடங்களை திறக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய தேவை ஏற்கனவே டெங்குவால் விழி பிதுங்கி கொண்டிருக்கும் பொதுமக்களை விழிப்புணர்வு செய்கிறேன் என்கிற பெயரில் பயமுறுத்தி, தனியார் பால் நிறுவனங்களை விமர்சனம் செய்வதல்ல. பொதுமக்களுக்கு தரமான பால் கிடைப்பதை உறுதி செய்வது மட்டுமே தற்போதைய தேவையாக இருக்க முடியும்.
எனவே தமிழகத்தின் பால் தேவையில் நாளொன்றுக்கு சுமார் 83.4 சதவீதம் (1.25கோடி லிட்டர்) தேவைகளை பூர்த்தி செய்து பொதுமக்களுக்கு தன்னிகரற்ற சேவையை வழங்கி வரும் தனியார் பால் நிறுவனங்களோடு ஈகோ பார்க்காமல் பொது மக்களுக்கு தரமான பால் கிடைப்பதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மட்டும் துரிதப்படுத்துமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.