ஆலந்தூர்:
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து மும்பைக்கு சென்ற தனது தோழியை வழியனுப்ப வேளச்சேரியை சேர்ந்த மகேஸ்வரன் (வயது 41) வந்திருந்தார். தோழியை அனுப்பி விட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது மத்திய தொழிற்படையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது அவருடைய கையில் விமான டிக்கெட் இருந்தது. விமான டிக்கெட்டை ரத்து செய்துவிட்டதால் திரும்ப செல்வதாக மகேஸ்வரன் கூறினார்.
இதில் சந்தேகம் கொண்ட மத்திய தொழிற்படையினர் விமான நிறுவனத்தில் விசாரித்தபோது அவர் வைத்திருந்தது போலி டிக்கெட் என தெரியவந்தது. விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் வழியனுப்ப அனுமதி கிடையாது என்பதால் விமானத்தில் பயணம் செய்வதாக போலியான விமான டிக்கெட்டை அவர் பயன்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து மகேஸ்வரன், விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில் அவர் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருவது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.