சென்னை:
சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கல்லூரி நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
முதலாம் ஆண்டு மாணவ - மாணவிகளில் பெரும்பாலானவர்கள் ‘ராக்கிங்’ தொல்லை காரணமாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எனவே ராக்கிங்கை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
கல்லூரிகளில் அசவுகரியத்தை சந்திக்கும் மாணவ -மாணவிகள் நேரில் புகார் அளிக்க தயங்குவது பற்றியும் பேசப்பட்டது. எனவே அத்தகைய மாணவிகளுக்கு உதவும் வகையில் கல்லூரி இணையத்தள சேவையை இடையூறு இல்லாமல் வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
இது தவிர மாணவ- மாணவிகள் தங்களது குறைகளை தெரிவிக்க கல்லூரி வளாகத்தில் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. மேலும் மாணவர்கள் நல்வழியில் செயல்பட கண்காணிப்புக்கும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே மருத்துவக் கல்வி இயக்ககமும் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு வரும்போது மிகவும் நல்ல முறையில் உடை அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். மாணவர்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது என்றும் மாணவிகள் லெக்கின்ஸ் அணியக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறுக்கமான உடை அணிந்து வரும் மாணவ- மாணவிகளை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டாம் என்றும் பேராசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.