செய்திகள்

கம்யூனிஸ்டு ஆதரவுடன் மீண்டும் மேல்சபை எம்.பி. ஆனார் வீரேந்திரகுமார்

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகிய வீரேந்திரகுமார், கம்யூனிஸ்டு ஆதரவுடன் மீண்டும் மேல்சபை எம்.பி. ஆனார்.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவராக இருந்தவர் வீரேந்திரகுமார், (வயது 81). இக்கட்சியின் சார்பில் கேரளாவில் இருந்து மேல்சபை எம்.பி.யாக இருந்தார்.

பீகார் முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான நிதிஷ்குமார் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு வீரேந்திரகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் நிதிஷ்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேல்சபை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

வீரேந்திரகுமாரின் எம்.பி. பதவி காலம் முடிய இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன. அவர், பதவி விலகியதால் அவரது இடத்திற்கு மீண்டும் தேர்தல் நடந்தது. இதில், வீரேந்திரகுமார் கேரள மாநிலத்தில் இருந்து கம்யூனிஸ்டு ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் கூட்டணி சார்பில் பாபு பிரசாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். நேற்று நடந்த ஓட்டுப்பதிவில் வீரேந்திரகுமார் 89 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் இன்னும் 4 ஆண்டுகளுக்கு வீரேந்திரகுமார் இப்பதவியில் இருப்பார்.

மேல்சபை எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றதும் வீரேந்திரகுமாருக்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணனும் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து வீரேந்திர குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கேரளாவில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் முரளிதரன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரும் மேல்சபை எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

முரளிதரன் மராட்டிய மாநிலத்தில் இருந்தும், ராஜீவ் சந்திரசேகர் கர்நாடகாவில் இருந்தும் தேர்வாகி உள்ளனர். கேரளாவில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் நடிகர் சுரேஷ்கோபி மேல்சபை எம்.பி.யாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews