ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியா - நைஜீரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் அசந்தா ஷரத் நைஜீரியாவின் அபியோடுன்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை 4-11 என ஷரத் இழந்தார். அதன்பிறகு 11-5, 11-4, 11-9 என தொடர்ந்து மூன்று செட்டையும் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
2-வது ஆட்டத்தில் சத்தியன் ஞானசேகரன் செகுன் டோரியோலாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 10-12 என இழந்த ஞானசேகரன், அடுத்த மூன்று செட்டுகளையும் 11-3, 11-3, 11-4 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.
3-வது ஆட்டத்தில் ஹர்மீத் தேசாய் - சத்தியன் ஞானசேகரன் ஜோடி ஒமோடாயோ - அபியோடுன் ஜோடியை எதிர்கொண்டது. இதில் இந்திய ஜோடி 11-8, 11-5, 11-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3-0 என நைஜீரியாவை இந்தியா 3-0 என வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது. இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 9 தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளது.