செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு- இந்திய ஹாக்கி அணி மலேசியாவை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இன்று நடந்த ஹாக்கி போட்டியில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. #CWG2018 #GC2018

மாலை மலர்

கோல்டுகோஸ்ட்:

21-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகிறது.

ஆண்களுக்கான ஹாக்கிப் போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி மலேசியாவை எதிர் கொண்டது. இதில் இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்திய அணி சார்பில் ஹம்பிரித் 2 கோல் அடித்தார். ஆட்டத்தின் 3-வது மற்றும் 44-வது நிமிடங்களில் அவர் இந்த கோல்களை அடித்தார்.

இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 2-2 என்ற கணக்கில் ‘டிரா’ செய்தது. 2-வது ஆட்டத்தில் வேல்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது.

இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை சந்திக்கிறது. இங்கிலாந்து அணியும் அரை இறுதிக்கு நுழைந்து இருந்தது.

இந்திய பெண்கள் ஆக்கி அணி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது.

குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் அமித் பஜ்கல் அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். 46-49 கிலோ பிரிவில் அவர் கால்இறுதியில் ஸ்காட்லாந்து வீரர் அகில் அகமதுவை சந்தித்தார். இதில் அமித் பங்கஜ் 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் அவர் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார்.

அமித் அரை இறுதியில் உகாண்டா வீரர் ஜுமா பிரோவை சந்திக்கிறார்.

ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிகல்- சவுரவ் கோ‌ஷல் ஜோடி வெற்றி பெற்றது.

இந்த ஜோடி 11-3, 11-3 என்ற கணக்கில் கயானாவை சேர்ந்த மேரிபங்க்- ஜேகன் ராய் ஜோடியை வீழ்த்தியது.

துப்பாக்கி சுடும் போட்டியில் ககன்நரங் இன்று ஏமாற்றம் அளித்தார். 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவில் அவரால் 7-வது இடத்தை தான் பிடிக்க முடிந்தது.

இதேபோல மற்றொரு இந்திய வீரரான ஜெய்ன்சிங் 4-வது இடத்தை பிடித்தார்.