செய்திகள்

காமன்வெல்த்தில் 26 தங்கத்துடன் 66 பதக்கங்களை குவித்தது இந்தியா

கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலத்துடன் 66 பதக்கங்களை குவித்து 3-வது இடம்பிடித்துள்ளது. #CWG2018 #GC2018

மாலை மலர்

குறிப்பாக டேபிள் டென்னிஸில் இதுவரை இல்லாத வகையில் அபாரமான ஆட்டத்தை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வெளிப்படுத்தி பதக்கங்களை அறுவடை செய்தனர். அதேபோல் பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பளுதூக்குதல் போன்றவற்றிலும் பதக்கத்தை அள்ளினார்கள். அதிகபட்சமாக துப்பாக்கி சுடுதலில் இந்தியா 7 தங்கம் வென்றது.

தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனைப் படைத்தார். குத்துச்சண்டையில் கவுரவ் சோலங்கி, விகாஸ் கிருஷ்ணன், மேரி கோம் ஆகியோர் தங்கம் வென்றனர்.

துப்பாக்கி சுடுதலில் இந்தியா 7 தங்கங்களை அள்ளியது. ஜிது ராய், அனிஷ், சங்சீவ் ராஜ்புட், மானு பகர், ஹீனா சிது, தேஜாஸ்வானி சவந்த், ஷ்ரேயாசி சிங் ஆகியோர் தங்கம் வென்றனர்.

டேபிள் டென்னிசில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ராவும் தங்கம் வென்றனர்.

பளுதூக்குதலில் சதீஷ்குமார் சிவலிங்கம், வெங்கட் ராகுல் ரகாலா, சானு சாய்கோம் மிராபாய், சஞ்ஜிதா சானு குமுக்சாம், பூணம் யாதவ் ஆகியோர் தங்கம் வென்றனர்.