செய்திகள்

லோதா கமிட்டி சிபாரிசுகளை அமல்படுத்த கமிட்டி அமைப்பு: இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழுவில் முடிவு

இந்திய கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக சீர்திருத்தம் குறித்து லோதா கமிட்டி அளித்த சிபாரிசுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மாலை மலர்

மும்பை :

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பிரதிநிதியாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன் பங்கேற்றார்.

2 மணி 45 நிமிடம் நீடித்த இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக சீர்திருத்தம் குறித்து லோதா கமிட்டி அளித்த சிபாரிசுகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் படி முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதாவின் சிபாரிசுகளை அமல்படுத்த ஒரு கமிட்டியை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி கருத்து தெரிவிக்கையில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி லோதா கமிட்டி சிபாரிசுகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தும் நோக்கில் 5 அல்லது 6 பேர் கொண்ட கமிட்டி நாளை (இன்று) அமைக்கப்படும். இந்த கமிட்டி தனது அறிக்கையை இரண்டு வாரத்தில் அளிக்கும். அறிக்கை அளித்த 2 நாட்களில் அதனை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும். அரசு அனுமதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுவது என்ற எங்களது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை’ என்றார்.