செய்திகள்

காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வடகிழக்கு மாநில மக்களுக்கு ராகுல் நன்றி

திரிபுரா, நாகலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வடகிழக்கு மாநில மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற திரிபுரா, நாகலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது.  நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் ஒரேயொரு இடத்தில்கூட காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை.

அதேவேளையில், காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவந்த மேகாலயாவில் அதிக எம்.எல்.ஏ.க்களை பெற்ற கட்சி என்ற வகையில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இருப்பினும், அங்கு ஆட்சி அமைக்க தேவையான 31 உறுப்பினர்களுக்கான மெஜாரிட்டியை பெற முடியாததால் சிறிய கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன், பா.ஜ.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அங்கு அமையவுள்ளது.

மேகாலயாவின் புதிய முதல் மந்திரியாக பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகனும், தேசிய மக்கள் கட்சி தலைவருமான கான்ரட் சங்மா நாளை (6-ம் தேதி) காலை பதவி ஏற்கிறார்.

இந்நிலையில், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்த வடகிழக்கு மாநில மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில். ‘திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மக்கள் அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி மரியாதை அளிக்கிறது. நாட்டின் வடகிழக்கு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறுவோம். கட்சிக்காக அயராது உழைத்த ஓவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். #tamilnews