செய்திகள்

கொழும்பு டெஸ்ட்: மெண்டிஸ், கருணாரத்னே ஆட்டத்தால் இலங்கை 209/2; இந்தியா 230 ரன்கள் முன்னிலை

கொழும்பில் நடைபெற்று வரும் டெஸ்டின் 3-வது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது.

மாலை மலர்

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. அஸ்வின் பந்து வீச்சில் இலங்கை அணி விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. அவருக்குத் துணையாக ஜடேஜா, மொகமது ஷமி விக்கெட்டுக்கள் வீழ்த்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் டிக்வெல்லா அதிகபட்சமாக 51 ரன்கள் சேர்த்தார்.


சதம் அடித்த மெண்டிஸ்

இலங்கை அணி இந்தியாவை விட முதல் இன்னிங்சில் 439 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால் இந்தியா பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் இலங்கை அணி தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.

தொடக்க வீரர்களாக உபுல் தரங்காவும், கருணாரத்னேவும் களம் இறங்கினார்கள். இலங்கை அணியின் ஸ்கோர் 7 ரன்னாக இருக்கும்போது தரங்கா உமேஷ் பந்தில் ஆட்டம் இழந்தார். 2-வது விக்கெட்டுக்கு கருணாரத்னே உடன் குசால் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார்.


92 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கும் கருணாரத்னே

இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அஸ்வின், ஜடேஜா பந்துகளை நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடினார்கள். இதனால் இலங்கையின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் அஸ்வின், ஜடேஜாவை பந்து வீச்சில் இருந்து கோலி மாற்றவில்லை. இதை சாதகமாக எடுத்துக் கொண்டு இருவரும் ரன்கள் குவித்தனர்.

ஒரு வழியாக அஸ்வின், ஜடேஜாவிற்குப் பதிலாக மொகமது ஷமி மற்றும் பாண்டியாவை பந்து வீச அழைத்தார் கோலி. இதற்கு பலன் கிடைத்தது. சிறப்பாக விளையாடி சதம் அடித்த மெண்டிஸ், 110 ரன்கள் எடுத்த நிலையில் பாண்டியா பந்தில் விக்கெட் கீப்பர் சகாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இந்த கேட்சை சகா அபாரமாக டைவ் அடித்து பிடித்தார். அப்போது இலங்கை அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்னாக இருந்தது. கருணாரத்னே - மெண்டிஸ் ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 191 ரன்கள் குவித்தது.

3-வது நாள் ஆட்டம் முடிய சில ஓவர்களே இருந்ததால் இலங்கை அணி முன்னணி பேட்ஸ்மேனை களம் இறக்காமல் நைட்வாட்ச்மேனாக புஷ்பகுமராவை களம் இறக்கியது.


மெண்டிஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா

கருணாரத்னே - புஷ்பகுமரா ஜோடி 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இலங்கை 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்துள்ளது. கருணாரத்னே 92 ரன்னுடனும், புஷ்பகுமரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.