மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம். 
செய்திகள்

நாகர்கோவிலில் இன்று கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் போராட்டம்

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாகர்கோவிலில் கல்லூரி மாணவ-மாணவிகள் திடீரென போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவ- மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

மாணவர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதில் டெல்லி பல்கலை கழக மாணவர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்திலும் கல்லூரி மாணவ- மாணவிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை பல்கலை கழக மாணவர்கள் விடிய, விடிய போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கல்லூரி வளாகத்தில் திரண்டு நின்று குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், டெல்லியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

இதேபோல நாகர்கோவிலில் உள்ள தனியார் கலை கல்லூரி மாணவிகளும் இன்று போராட்டத்தில் குதித்தனர். டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடந்தது.

இதில் பங்கேற்ற மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திரண்டனர்.

பின்னர் கல்லூரி மாணவிகள் அனைவரும் கல்லூரி வளாகத்தின் உள்ளேயே அமர்ந்து கோ‌ஷம் எழுப்பினர். போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வர உள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் இன்று போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.