கோவை:
கோவை சோமனூர் பகுதியை சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் கோவையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி பகுதிநேரமாக சோமனூரில் பணபரிவர்த்தனை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று மாணவி வழக்கம் போல வேலைக்கு சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் மாணவி வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை 8 மணியளவில் தனது மகளை தொடர்பு கொண்டார். அப்போது போனை எடுத்து மாணவி கிளம்பி விட்டதாகவும் விரைவில் வந்து விடுவதாகவும் கூறி உள்ளார். ஆனால் அதன்பின்னரும் மாணவியின் தந்தை தொடர்பு கொண்டார். அப்போது மாணவி போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மாணவியின் தந்தை தனது மகள் வேலை செய்யும் கடைக்கு சென்று பார்த்தார். அப்போது அந்த கடை பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் தனது மகளை அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் எந்த பலனும் இல்லை. பின்னர் வீட்டுக்கு திரும்பினார்.
இரவு 10.30 மணியளவில் ஆட்டோ டிரைவர் ஒருவர் மாணவியை அவரது வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது மாணவியின் உடைகள் கிழிந்து அவர் ரத்த காயத்தில் இருப்பது கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அவர்கள் ஆட்டோ டிரைவரிடம் கேட்டனர். அப்போது மாணவி நடுரோட்டில் எங்கே செல்வது என்று தெரியாமல் அழுது கொண்டு இருந்தார். இதை பார்த்த நான் அவரிடம் விசாரித்து வீட்டிற்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார். பின்னர் பெற்றோர் மாணவியிடம் என்ன நடந்தது என்று கேட்டனர். அப்போது மாணவி தான் வேலை பார்க்கும் பணபரிவர்த்தனை நிறுவனத்தின் உரிமையாளர் தன்னை காரில் அழைத்து சென்று வீட்டில் கொண்டு விடுவதாக கூறினார். இதனை உண்மை என நம்பிய நான் அவரது காரில் ஏறினேன். ஆனால் அவர் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றார். அவரது வீட்டில் யாருமே இல்லை. இதனால் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. திடீரென அவர் என்னை அறைக்குள் அழைத்து சென்று அறைக்கதவை பூட்டினார். பின்னர் என்னை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சியடைந்த நான் அங்கு இருந்து தப்பினேன். என்னை அவர் காரில் பின் தொடர்ந்து வந்தார். பயத்தில் ஓடிய நான் பள்ளத்தில் மறைவதற்காக குதித்த போது முட்புதரில் சிக்கி கொண்டேன். என்னை தேடி பார்த்த அவர் பின்னர் திரும்பி சென்று விட்டார்.
நான் முட்புதரில் இருந்து வெளியே வந்து ரோட்டில் நின்று அழுது கொண்டு இருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் வீட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.
இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அப்போது சமபவம் நடந்த இடம் திருப்பூர் மாவட்டம் மங்கலம் போலீஸ் நிலையத்துக்குள் வருவதால் கருமத்தம்பட்டி போலீசார் மாணவியின் பெற்றோரை மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு செல்லுமாறு கூறினர்.
அப்போது இந்த தகவலை தெரிந்து கொண்ட மங்கலம் போலீசார் மாணவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு சமாதானமாக செல்லுமாறு கூறி உள்ளனர். இதனை மறுத்த மாணவியின் பெற்றோர் இன்று மங்கலம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்பத்தி உள்ளது.